புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் கடந்த 1998ஆம் ஆண்டு பெரியார் சிலை வைக்கப்பட்டது. இச்சிலையை திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர், தேர்தல் விதிமுறைப்படி பெரியாரின் சிலை துணியால் மூடப்பட்டது.
பின்னர் தேர்தல் ஆணையம் அனுமதியுடன் பெரியார் சிலை மீது மூடப்பட்டிருந்த துணியை திராவிடர் கழக நிர்வாகிகள், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அகற்றினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பெரியார் சிலையின் தலைப்பாகம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இந்த தகவலை அறிந்து திராவிடர் கழக தொண்டர்கள், அப்பகுதியில் காலை முதல் குவிந்து வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிலை உடைப்பு தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், உடைந்த சிலையை துணியால் மூடி வைக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சிலையை உடைத்தவர்களை கண்டுபிடிக்கும்வரை பெரியார் சிலை திறந்தே இருக்க வேண்டும் என்று தி.கவினர் வலியுறுத்தினர். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு தா.பாண்டியன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட திராவிடர் கழக தொண்டர்கள் ஹெச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.