ஏழை மக்கள் பசியோடிருக்கக் கூடாதென மறைந்த முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட முத்தான திட்டம்தான், ‘அம்மா உணவகம்’. இவை மாநகராட்சிகள், நகராட்சி நிர்வாகங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உணவகங்கள் செயல்பட்டாலும், அவற்றிற்கு முன்னோடி, ’தமிழ்நாடுதான்’.
இந்த உணவகம் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில், பெரும்பாலானோர் அதனை அரசியல் சார்ந்த நகர்வாகக் கூறினர். குறைந்த விலையில் உணவளிப்பதால் தோல்வியடைந்த திட்டமென்றுகூட ஒதுக்கினர். ஆனால், கரோனா பெருந்தொற்றால் உருவான நெருக்கடியில், அம்மா உணவகங்கள்தான் சாமானியர்களின் வயிற்றை நிரப்புகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில், உணவகங்களையும், சொமாட்டோ, ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளையும் நம்பியிருந்த பலருக்கும், அம்மா உணவகம்தான் தற்போது உணவளித்துவருகிறது. அதிக வருமானமில்லாத விளிம்புநிலை மக்களும், இதுவரை அம்மா உணவகத்தை நாடாத நடுத்தர வர்க்க மக்களும் அம்மா உணவகத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
அரவணைக்கும் அம்மா உணவகம்! ஊடரங்கில் விதிமுறைகளுடன் உணவகங்கள் செயல்பட அனுமதித்திருந்தாலும்கூட, ஒரு சில கடைகள்தான் திறந்துள்ளன. இதனால், அம்மா உணவகம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு சப்பாத்தி, பொங்கல், கிச்சடி, தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவை ருசியாக மூன்று வேளையும் வழங்கப்படுகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள், குறைந்த விலைக்கு தரமான உணவு கிடைப்பது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறதெனக் கூறுகின்றனர்.
அம்மா உணவகத்தில் பணிபுரியும் அமுதா கூறுகையில், “மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், ஆதரவற்று சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு, இலவசமாக மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் திட்டத்தோடு தன்னார்வமுள்ள சிலரும் அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து உதவி செய்துவருகின்றனர்.
நலிவான மக்களை அரவணைக்கும் அம்மா உணவகத்தின் சிறப்பு காணொலி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மனநல காப்பகத்திற்கு, தொண்டு நிறுவனத்தின் உதவியோடு, இலவசமாக அம்மா உணவகத்திலிருந்து உணவு வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்புவரை, அம்மா உணவகத்தில் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை. தற்போது, அம்மா உணவகம்தான் அனைத்து தரப்பினருக்கும் உணவளித்துவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் கேள்விக்குறியாகும் காலணி தைப்பவர்களின் வாழ்வாதாரம்!