புதுக்கோட்டை தீண்டாமை: அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க ஒன்றாக வழிபாடு நடத்த தயாராகும் மக்கள் புதுக்கோட்டை: முட்டுக்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் அப்பகுதி மக்களிடம் நேரில் சந்தித்து இச்சசம்பவம் குறித்து கேட்டு அறிந்தனர்.
இந்த விசாரணையின்போது அப்பகுதி மக்கள் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும்; அப்பகுதியில் டீக்கடைகளில் நிலவும் இரட்டைக் குவளை விவகாரம் மற்றும் கோயிலுக்குள் சாமி கும்பிட மறுப்பு தெரிவிக்கும் விவகாரம் குறித்தும் தெரிவித்தனர். மேலும் அவற்றை தீர்த்து வைக்குமாறும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் டீக்கடை உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆதிதிராவிடர் பகுதி மக்களை அழைத்துச்சென்று பூட்டியிருந்த கோயிலை திறந்து சாமி கும்பிட வைத்தனர். இந்த இரண்டு விவகாரத்தில் டீக்கடை மூக்கையா மற்றும் பட்டியலின மக்களை அவதூறாகப் பேசி சாமியாடிய சிங்கம்மாள் ஆகியோர் பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் டீக்கடைகளில் இரட்டை குவளை விவகாரம் மற்றும் கோயிலில் பட்டியல்இன மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்து தீர்வு காண்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட மூன்று சமூக மக்கள் பிரதிநிதிகளுடனான சமாதான பேச்சுவார்த்தை இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நேற்று (டிச.28)நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சுமூக பேச்சில் மூன்று தரப்பினரும் சுமூகமாக செல்ல சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால், வேங்கை வயல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் இறையூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில், அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட மூன்று சமூக மக்களும் ஒரே நேரத்தில் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:புதுக்கோட்டை தீண்டாமை: இறையூர் பொதுமக்களுடன் கோட்டாட்சியர் சமாதானப் பேச்சுவார்த்தை