சுதந்திர தின விழா மேடையை பிரச்சார மேடையாக மாற்றிய நகர்மன்ற துணைத் தலைவர் புதுகோட்டை: நாடு முழுவதும் 77 ஆவது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக இன்னுயிர் நீத்த பல தலைவர்களின் தியாகங்களை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் உள்ள சேமப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தேசிய கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றுவதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
மேலும் மூவர்ண பலூனையும், அமைதியை வெளிப்படுத்தும் விதமாக வெண் புறாக்களையும் பறக்கவிட்டார். பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மரியாதை செலுத்தினார். இதில் பல்வேறு துறை சார்பில் 62 லட்சத்து 75 ஆயிரத்து 260 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், சிறந்த முறையில் பணியாற்றிய பல்வேறு துறையினருக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நகர் மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி, நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தங்க பதக்கங்களும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. அதனைதொடர்ந்து பேசிய நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நாம் எப்பொழுதும் கொண்டாடுவது போல் இது சாதாரண நாளாக இருக்க கூடாது என்றும், நம் முன்னோர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் நினைவு கூர்ந்து, அவர்களைப் போற்றுவதற்காகவே இந்த விழாவினை கொண்டாட வேண்டும்" என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி, "ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த நமது இந்தியாவை மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி, வஉசி, ஈவேரா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகிய தலைவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்து, அவர்களின் தியாகத்தின் வழியாக இந்த சுதந்திர காற்றை நாம் சுவாசித்து வருகிறோம்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், பன்முகத்தன்மை கொண்ட இந்தியா, ஒருமுகத் தன்மை கொண்ட இந்தியாவாகவும். நம் முன்னோர்கள் பாடுபட்டு கிடைத்த சுதந்திரத்திற்கு சோதனை, திருஷ்டி போன்றும், இந்தியா வல்லரசு நாடாக வளர்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில் சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமூக நலம் இதற்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 9 வருடங்களாக இந்தியா நலிவுற்ற நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மறுபடியும் தூய சுதந்திர காற்றையும், மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமூக நலம் ஆகியவற்றை பேணி பல நன்மை கொண்ட நாடாக இந்தியாவை மாற்றம் அடைவதற்க்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது என்றார்.
மேலும், அப்படிபட்ட நாட்டை உருவாக்குவதற்கான பெயர் தான் இந்தியா (INDIA) என்றும் பழைய இந்தியா போய் விட்டு புதிய இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது என்றார். அதில் நமது திராவிட மாடல் தலைவர், தலைவர் தளபதி இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி, இந்தியாவுடைய சமூக நிலையை நிலைநாட்டுவதற்காக அரும்பாடுபட்டு கொண்டிருக்கிறார்" என்று பேசினார்.
நகர் மன்ற துணைத்தலைவர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நகர் மன்ற தலைவர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள், இது சுதந்திர தின விழா மேடையா அல்லது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார மேடையா என முகம் சுழிக்கத் தொடங்கினர்.
இதையும் படிங்க: ‘அடுத்த ஆண்டு சுதந்திர தினத்திலும் உரையாற்றுவேன்’ - நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி வைத்து பிரதமர் உரை!