புதுக்கோட்டை: கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி ஊராட்சி மற்றும் பட்டத்திக்காடு ஊராட்சியில் வசிக்கக் கூடிய 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருமணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட மயிலாடி தெருவில் உள்ள மயானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயானத்திற்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், கடந்த 40 வருடத்திற்கும் மேலாக மயானத்திற்கு செல்ல விவசாய நிலங்கள் மற்றும் கிராங் எனும் குளத்தில் இறங்கி தான், இறந்தவர்களின் உடலை எடுத்துச்சென்று வருகின்றனர்.
இந்தச் சூழலில் திருமணஞ்சேரி ஊராட்சி மயிலாடி தெருவைச்சேர்ந்த சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி பாஞ்சாலை(50) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால், மழையின் காரணமாக மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள குளத்தில், தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. இதன் காரணமாக அவரது உடலை கிராங் குளத்தின் வழியாக முழங்கால் அளவு தண்ணீரில் தூக்கிச் சென்று உறவினர்கள் தகனம் செய்தனர்.