புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் பகுதியான காமராஜபுரத்தில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் புதுக்கோட்டை, மரக்கடை தெருவை சேர்ந்த தம்பதியரின் மகன் அப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் பள்ளி இடைவேளையின் போது காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளியில் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் என அனைவரும் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. பள்ளி நிர்வாகத்திடமும், பள்ளி பாதுகாவலரிடமும் சிறுவனின் பெற்றோர், எப்படி உங்களுக்கு தெரியாமல் சிறுவன் சென்றான்? குழந்தைகளை பாதுகாப்பது தானே உங்கள் வேலை. பள்ளியில் சிசிடிவி உட்பட கல்வித்துறை அறிவுறுத்திய எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் எப்படி பள்ளி நிர்வாக செயல்படுகிறது என சரமாறியாக கேள்வி எழுப்பினார்கள்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து உடனடியாக கணேஷ்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பள்ளிக்கு வந்த காவல்துறையினர், சம்பவம் குறித்து ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். மறுபுறம் மாணவன் எங்கு சென்றான் என்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அனைவரும் தேடி வந்த நிலையில், மாணவன் புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாணவனை மீட்க பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் காவல்துறையுடன் சென்று சிறுவனை மீட்டு வந்தனர்.