புதுக்கோட்டை:கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கை வயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்று 200 நாட்கள் ஆகக்கூடிய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரக் கூடிய சூழ்நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில்தான் குற்றவாளிகளைக் கண்டறிய சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடினர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் அன்று 3 பேர் ஆஜரான நிலையில், வேங்கை வயலைச் சேர்ந்த 8 பேர் ஆஜராகவில்லை.
பின்னர் அந்த 8 பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, அந்த 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும், அதேபோல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கை வயலைச் சேர்ந்த 8 பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடி, பாதிக்கப்பட்ட மக்களையே போலீசார் பரிசோதனைக்கு உட்படுத்த முயல்வதாக வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் அடிப்படையில், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த 8 பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் கடந்த 30ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மேலும், ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட 8 நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி அதனைப் படித்துப் பார்த்து, அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கடந்த 1ஆம் தேதி மீண்டும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களது விளக்கத்தை தெரிவிக்கலாம் என்று கூறி அந்த 8 பேரையும் அனுப்பி வைத்தார்.
அதன்பின் கடந்த 1ஆம் தேதி சம்பந்தப்பட்ட 8 பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும், இவர்களுடன் இந்த வழக்கு விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரான நிலையில், டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி, இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது என்று கேட்டார். அப்போது டிஎஸ்பி பால்பாண்டியன், இந்த வழக்கைப் பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால், அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட 8 பேருக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை என்றும், அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.