புதுக்கோட்டை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் ஓரளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால், முதல் போகம் முடிந்து இரண்டாம் போக விவசாயம் சிறப்பாக நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், நேற்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டபோதிலும், விவசாயம் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. ஆனால், நேற்று இரவு பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த நெற்கதிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளன.
மழையால் நாசமான நெற்பயிர்கள் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள அன்னவாசல், ஆரியூர், சித்தன்னவாசல், மணமேல்குடி, இடையர்தெரு, பணங்குடி, ஆலங்குடி, மன்னவேலம்பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஏற்கனவே சிரமத்திலுள்ள விவசாயிகள், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பால் கடுமையான சிக்கல்களைச் சந்தித்துள்ளனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ”நேற்று ஒரே நாளில் பெய்த மழையால் அனைத்தும் நாசமாகிவிட்டது. இதனை நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை. இந்த பாதிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பவே மூன்று மாதமாகும். சாய்ந்த கதிர்களை அப்புறப்படுத்துவதற்கு முதலீடு செய்த தொகையை விட அதிகளவில் செலவாகும்” என்றார் வேதனையாக.
இதையும் படிங்க:ஊரடங்கால் மல்லிகைக்கு மவுசு குறைந்தது: நிவாரணம் கோரும் விவசாயிகள்!