புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அங்குள்ள மாரியம்மன் கோயில் மண்டபத்தில் துப்பாக்கி பாதுகாப்புடன் மொய்விருந்து நடத்தினார். அந்த மொய் விருந்தில் ரூ.4 கோடி வரை மொய்ப் பணம் வசூலானது.
இந்நிலையில், ஜூலை 26ஆம் தேதி நள்ளிரவில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குள் இருந்து வெளியே ஒருவர் பாய்ந்தோடி அருகிலிருந்த சோளக்கொல்லைக்குள் ஓடி மறைந்துள்ளார்.
மொய் விருந்தில் வசூலான பணம் அதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி 'திருடன் திருடன்' என சத்தம்போட்டதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சோளக்கொல்லைக்குள் மறைந்திருந்த திருடனை மடக்கிப் பிடித்தனர்.
அவனைப்பிடித்து விசாரித்தபோது வடகாட்டை அடுத்த அணவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவநேசன் (24) என்பது தெரியவந்தது. மேலும், அவன் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், கிருஷ்ணமூர்த்தியின் மொய் விருந்து பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதாலும் மொய்ப்பணத்தை அவர் செலவு செய்வதற்குள் கொள்ளையடித்துச் சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக வடகாடு காவல் நிலையத்தில் சிவநேசன் ஒப்படைக்கப்பட்டான். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.