புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் உமா மகேஸ்வரி மாவட்ட மனநலத் திட்டத்தின் சார்பில் 'மீண்டு வருவது மனதின் சிறப்பு' என்ற மனநல விழிப்புணர்வு காணொலியுடன் அது குறித்த கையேட்டினை வெளியிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, "ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலகத் தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஒருவார காலத்திற்கு மனநலம், தற்கொலைத்தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மனக்கவலை நோயின் அறிகுறிகள், எதிர்மறை எண்ணங்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவருக்கு நாம் எவ்வாறு உதவ முடியும் என்பதை விளக்கும் வகையில் ஒரு நிமிட விழிப்புணர்வு காணொலிக்காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
உலக தற்கொலை தடுப்பு தினச்சிறப்பு காணொலி வெளியீடு!
புதுக்கோட்டை: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு 'மீண்டு வருவது மனதின் சிறப்பு' என்ற தலைப்பில் மனநல விழிப்புணர்வு காணொலியை புதுக்கோட்டை ஆட்சியர் வெளியிட்டார்.
இதனைப் பொதுமக்கள் அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்பவர்களுக்கு இலவச மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டவர்களுக்கு கூடுதலாக மாதந்தோறும் 104 எண்ணில் இருந்து அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆற்றுப்படுத்தும் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர் எத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய பின்பும் தொடர்ந்து 18 மாதங்களுக்கு 104 மனநல உதவி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு ஆற்றுப்படுத்தும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட மனநல ஆலோசனை மையத்தின் மூலமாகவும் மனநல ஆற்றுப்படுத்தும் சிகிச்சை வழங்கப்படுகிறது. மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை 94860 67686 என்ற அலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொண்டு பயன் பெறலாம்" என்று தெரிவித்தார்.