'வேற்றுமையில் ஒற்றுமை' ஸ்ரீ தர்மசம்வர்த்தினி கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்! புதுக்கோட்டை:இரண்டாவது குரு ஸ்தலம் என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில், இந்து சமய அறநிலை துறைக்குச் சொந்தமான மற்றும் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இந்தக் கோயிலில் வியாழன் மற்றும் பிரதோஷ வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மேலும், இந்தக் கோயிலுக்குப் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு மேற்கொள்வது வழக்கமாகும். இந்தக் கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து, கடந்த ஆறு மாத காலமாக கோயிலை புதுப்பிக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அப்பணி நிறைவு பெற்று மர்ச் 27-ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பே கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் பல்வேறு வகையான பூஜைகளைச் செய்து வந்தனர்.
மேலும், இந்த கும்பாபிஷேகத்திற்கு மதங்களைக் கடந்து அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கோயில் நிர்வாகத்தினர், ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும், அதே போல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று நேரடியாக அழைப்பிதழ் கொடுத்தனர்.
இதனால், கும்பாபிஷேகம் நடைபெறும் கோயிலுக்குக் கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து என அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் , மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று சீர் வரிசைகளை வழங்கி வந்தனர். அதனை, கோயில் நிர்வாகத்தினர் இன்முகத்துடன் பெற்றுக் கொண்டனர். இதனால், ஆலங்குடி பகுதியை விழாக் கோலம் பூண்டு இருந்தது.
இதனையடுத்து, மார்ச்-26 இரவு வரை நான்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், மார்ச்-27 காலை இரண்டு யாகசாலை பூஜை என மொத்தம் ஆறு யாகசாலை பூஜை நிறைவடைந்து. பல்வேறு புனிதத் தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைச் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மேளதாளங்கள் முழங்க கோயிலின் ராஜகோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பின்னர், ராஜகோபுரத்திற்கு மேல் கருட பகவான் வட்டமிடச் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வருகை தந்த 10,000 மேற்பட்ட பொதுமக்கள் புடை சூழ ராஜகோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
பின்னர், புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், கும்பாபிஷேகத்திற்காகக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில் வழங்கியது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது மட்டுமல்லாமல், பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
மேலும், தனியார் அமைப்பு சார்பில் மருத்துவ முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பல்வேறு இடங்களில் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.