தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றை தூர்வாறும் இளைஞர்களுக்கு 100 நாள் வேலைதிட்ட பணத்தை நிதியுதவியாக அளித்த மூதாட்டி - வறட்சி

புதுக்கோட்டை: அரசாங்கம், மாவட்ட நிர்வாகம் நீண்டகாலமாக கண்டு கொள்ளாததால் தனது பகுதியில் உள்ள மழை நீர் வந்து சேரும் வரத்து வாரியை இளைஞர்கள் தூர்வாரி சுத்தம் செய்வதும், அதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த வயதான பெண்மணி நிதி உதவி செய்து வரும் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றை தூர்வாறும் இளைஞர்களுக்கு 100 நாள் வேலைதிட்ட பணத்தை நிதியுதவியாக அளித்த மூதாட்டி

By

Published : May 22, 2019, 8:42 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் பெரும் விவசாயப் பகுதியாகும். இங்கு நெல், கடலை, வாழை தென்னை உட்பட பல்வேறு பணப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இவை அனைத்தையும் பயிரிடுவதற்கு அடிபடையான அம்சமாக தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதாலும், வரத்து வாரிகள் தூர்வாரப்படாமல் இருந்ததால், மழைநீர் சென்று சேராமல் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, ஆழ்குழாய் கிணற்றில் கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாததால் பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், நீராதாரத்தை பெருக்கும் பொருட்டு வரத்து வாரிகள் மற்றும் குளங்களை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து கொத்தமங்கலம் பகுதியில் உள்ள அம்புலி ஆற்றை தூர்வார தொடங்கினர்.

இதனை தொடங்கும்போது இளைஞர்களால் இது சாத்தியமா என்று பலரும் கேலி செய்த நிலையில், தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தூர்வாரும் பணியை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தூர்வாரும் மண் மூலம் அதன் கரையை பலப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து இளைஞர்களின் பணியை கண்ட சமூக ஆர்வலர்களும், வெளிநாட்டில் வாழ் பகுதியினரும் அவர்களுக்கு நிதியுதவி அளித்து தூர்வாரும் பணியை ஊக்குவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, அதே பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி 100 நாள் வேலைத்திட்டத்துக்கு சென்று சேமித்து வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை தூர்வாரும் பணிக்காக இளைஞர்களிடம் வழங்கினார்.

இந்த செயல் இப்பகுதி மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில்,

அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே எங்கள் ஊரை வறட்சியில் இருந்து மீட்கும் வகையில் தூர்வாரும் பணியை இளைஞர்களாகிய நாங்கள் ஏற்றுள்ளோம்.

இதேபோல் ஒவ்வொரு ஊர் இளைஞர்களும் வரத்து வாரியை தூர்வாரினால் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சென்று சேரும் என்றனர்.

இதுதொடர்பாக மூதாட்டி ராஜம்மாள் கூறுகையில்,

தண்ணீர் தான் அனைத்துக்கும் முதன்மையானது. அதற்காக இப்பகுதி இளைஞர்கள் இந்த அளவுக்கு தொண்டு செய்யும் போது அவர்களை ஊக்குவிக்கும் விதமாக என்னுடைய பணம் 10 ஆயிரத்தை வழங்கினேன்.

இதேபோல் ஒவ்வொருவரும் தானே முன் வந்து நிதியுதவி அளித்தால் தூர்வாரும் பணி எளிதாக முடியும் என்றார்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பல்வேறு குழந்தைகளும் தங்களது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை உடைத்து குளத்தை தூர் வாருவதற்கு வழங்கி உதவி செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details