புதுக்கோட்டை:வடகிழக்குப் பருவமழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழை ஏமாற்றி விட்டதாகவே சொல்லலாம்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஏழு நாட்களுக்கு மேல் ஆகிய நிலையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தமட்டில், அதிகபட்சமாக மழை பெய்தால் 10 நிமிடங்களுக்கு மேல் பெய்யாமல் இருப்பதாலும் மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே மழை பெய்வதாலும் அம்மாவட்ட விவசாயிகள் கதறி அழுகின்றனர்.
வடகிழக்குப் பருவங்களை எதிர்பார்த்து விவசாயம் செய்த விவசாயிகள் மழை போதுமான அளவு இல்லாததால் நாற்றுகளை ஆங்காங்கே வயல்களில் வீசி வருவதைக் காணலாம்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது கிணற்று நீர் அல்லது போர் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த வருடங்களில் வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்ததாகவும் தற்போது வருண பகவான் எங்களை ஏமாற்றிவிட்டதாகவும் கதறினர். கடந்த வருடங்களில் நெல், கரும்பு உள்ளிட்ட சாகுபடிகள் செய்தோம்; ஆனால் இந்த வருடம் தண்ணீர் இல்லாததால் வேர்க்கடலையை நடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.