“வேங்கைவயல் விவகாரத்தில் இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவை இல்லை” - நீதிபதி சத்தியநாராயணன் புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 177 ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒரு நபர் ஆணைய தலைவராக நீதிபதி சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று ( ஜூன் 21 ) இரண்டாவது முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தந்த சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியதோடு விசாரணையிலும் ஈடுபட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்யநாராயணன், “வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவை இல்லை என நினைக்கிறேன், இந்த விவகாரத்தில் சிபிசிஐடியின் விசாரனை சரியான பாதையில் சென்று கொண்டு உள்ளது, சிபிசிஐடி அதிகாரிகள் மேற்கொண்டுள்ள மரபணு சோதனை, குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட முடிவுகள் வந்த பிறகே இந்த வழக்கின் தன்மை குறித்து கூற முடியும்.
இதுவரை சிபிசிஐடி அதிகாரிகள் 159 நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ள நிலையில் மேலும் 50 நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும், அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பராமரிப்பவர் அதற்கு மேல் உள்ள அலுவலர் என நான்கு ஐந்து பேர் சங்கிலி தொடராக இதில் உள்ளனர். எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அதில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை காவல் துறையினர் நடத்திய விசாரணை, சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணை, மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என அனைத்தும் திருப்திகரமாகவே உள்ளது. எனவே இந்த வழக்கை தற்பொழுது சிபிஐக்கு மாற்ற அவசியம் இல்லை. விசாரணை சரியான முறையில் சென்று வருகிறது” என்று அவர் கூறினார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்க அரசு அமைத்துள்ள விதிகளை பின்பற்றினாலே தடுக்க முடியும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் வெளியேற்றம்.. மயிலாடுதுறையில் சர்ச்சை!