தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு புதுக்கோட்டை: குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (மார்ச் 24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில் கடந்த 21 மாதங்களில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 247 சிசுக்கள் இறந்துள்ளதாக தகவல் உரிமை அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் குறித்து, ஆணைய உறுப்பினர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், “புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 21 மாதங்களில் 247 சிசுக்கள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கொடுத்த அறிக்கைகள் மற்றும் தகவல்கள் ஆணையத்திற்கு திருப்திகரமாக உள்ளது. மேலும் இந்த மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ‘அறம்’ என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளீட்டு அதிகாரிகளுக்கு ஆணையம், தங்களுடைய பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது. தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம், விழுப்புரம் மாவட்டம் ஆதரவற்றோர் மையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அங்கு இரண்டு அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு சிபிசிஐடி காவல் துறையினர், ஆணையத்திடம் அவகாசம் கேட்டுள்ளனர். இரண்டு அறைகளில் முக்கிய ஆவணங்கள் இருந்ததால்தான், ஆணையம் இரண்டு அறைகளுக்குச் சீல் வைத்தது. இதில் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இனி கிடைக்க வேண்டியது நியாயம் மட்டுமே. அது சிபிசிஐடி விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.
சிபிசிஐடி அறிக்கை வந்த பின்புதான், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும். ஆதரவற்றோர் ஆசிர வழக்கைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசு தேசிய குழந்தைகள் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இருந்தால், குழந்தைகள் பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஆணையம் எடுக்க உள்ளது.
முதல்கட்டமாக மார்ச் 26 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். ஏற்கனவே இடங்கள் ரகசியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாணவியின் இறப்பு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
அம்மாணவியின் மரணத்தில் உள்ள விவகாரங்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் குழந்தைகள் நேரடி குறைதீர் முகாம் விரைவில் தொடங்கப்பட உள்ளது” என்றார்.
இதையும் படிங்க:கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் அடித்து கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை!