புதுக்கோட்டை:சிறார் கூர்நோக்கு மையங்கள் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர் எனவும், இவை குறித்து கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் உரிய இடமில்லாமல் தரையில் அமர வைத்து பாடம் சொல்லித் தருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழுவிற்கு புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் இன்று (ஏப்.29) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு என்பது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாணவ மாணவிகள் அமர்வதற்கு உரிய இடங்கள் உள்ளதா? அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, டாய்லெட் வசதி என்பது ஆகியவை செய்து தரப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரிய டாய்லெட் வசதிகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆணைய உறுப்பினர் உடனடியாக மொபைல் டாய்லெட் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை வழங்கினார்.
அதன் பேரில், உடனடியாக மொபைல் டாய்லெட் அமைக்கப்படும் என்று ஆட்சியர் அந்த இடத்திலேயே உறுதி அளித்தார். இதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், 'சிறார் கூர்நோக்கு மையங்கள், பாதுகாப்பு மையங்கள் ஆகியனவற்றின் மீது தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர் என்றும் இவை குறித்து கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து சிறுவர்களின் மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.