புதுக்கோட்டை:தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்கள் நிலை எவ்வாறு உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன, அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அரசு அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில், அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூய்மை பணியாளர்களுக்கான ஆணையம்:இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், “தேசிய அளவில் தூய்மைப் பணியாளர்களுக்காக ஆணையம் ஒன்று இயங்கிக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் 11 மாநிலங்கள், குறிப்பாக கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர்களுக்கான ஆணையம் உள்ளது.
தமிழகம்தான் முதலிடம்: தமிழ்நாட்டிற்கும் மாநில அளவிலான ஒரு ஆணையம் தேவை என்று ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளோம். மாநில அளவில் ஆணையம் இருந்தால் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். ஆகவே, தமிழக அரசு மாநில அளவிலான ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். இந்திய அளவில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.
வங்கி கடன் கொடுக்கும் அமைப்பு: 1993ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 227 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். இது பெருமைப்படுகிற விஷயம் அல்ல, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மாநில அளவிலான ஆணையத்தை அமைக்க வேண்டும். ஏற்கனவே நல வாரியம் உள்ளது. நல வாரியத்திற்கும், ஆணையத்திற்கும் வித்தியாசம் உள்ளது. தேசிய அளவில் தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கி கடன் கொடுக்கும் அமைப்பு உள்ளது. தமிழகத்திலும் அது போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.