புதுக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் திருச்சி தொகுதி எம்.பி., திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 'நாட்டில் அனைத்து மக்களுக்கும் குடும்ப அட்டைக்கு கரோனா நிவாரணமாக ரூ.7500-யை கொடுக்க வேண்டும். மேலும் அதை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். காரணம், அரசுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடை மூலம் ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. எனவே, குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
கரோனாவிற்கு வழி சொல்லச் சொன்னால், பிரதமர் மோடி கதை சொல்கிறார். மக்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதில் சாதனைப் படைத்துள்ளார், மோடி. குறிப்பாக, வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயதை 58-ஆக மாற்றியது தவறு.
புதுக்கோட்டை, திருநெல்வேலி போன்ற பல மாவட்டங்களில் நிறைய ஏக்கர் கணக்கில் ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு, சொத்து வாங்கி சேர்த்துள்ளார். அவற்றை நாட்டுடைமை ஆக்க வேண்டும். அதை நீதிமன்றம் தனிக்குழு அமைத்து, அரசுடைமை ஆக்கி, அதை உயர் மட்ட கமிட்டியை பொறுப்பாக வைத்து, அதிலிருந்து வரும் பணத்தை ஏழை மக்களுக்குக் கொடுக்கலாம். ஜெயலலிதா இறந்ததே இன்னும் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது. அதை ஆளும் கட்சி கவனம் செலுத்தாமல் அலட்சியமாக கையாளுகிறது.
கரோனா முழுமையாகப்போன பிறகு, தேர்தலைப் பற்றி யோசிக்கலாம். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்களை அப்படி சொல்லவில்லை என விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனால், ஆளும் கட்சி இப்படி கிளப்பிவிடுவது வேண்டும் என்றே செய்யும் செயல் ஆகும்.
மேலும் சென்னையில் கரோனா குறைவதில் வாய்ப்பு ஏதும் இல்லை. நாளுக்கு நாள் கரோனாவின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான், இதற்குக் காரணம். எனவே, அரசு கரோனா பரிசோதனை பண்ணுவதில், இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இலவச மடிக்கணினி வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்