தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் நல்லேர் பூட்டி சிறப்பு வழிபாடு செய்த விவசாயிகள்! - tamil new year specials

தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபட்டனர்.

புதுக்கோட்டையில் நல்லேர் பூட்டி சிறப்பு வழிபாடு செய்த விவசாயிகள்!
புதுக்கோட்டையில் நல்லேர் பூட்டி சிறப்பு வழிபாடு செய்த விவசாயிகள்!

By

Published : Apr 14, 2023, 4:16 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தின் எஸ்.குளவாய்பட்டி மற்றும் வாண்டான்விடுதி கிராமத்தில் நல்லேர் பூட்டி வழிபாடு

புதுக்கோட்டை: சித்திரை 1ஆன இன்று (ஏப்ரல் 14), தமிழ்ப் புத்தாண்டு தினம் உலகம் எங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் அன்று, ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, நல்லேர் பூட்டி விளைநிலத்தை வழிபட்டால், அந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.குளவாய்பட்டியில் உள்ள காடுவார அய்யனார், சப்பாணி கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களை தேங்காய், பழங்கள், பச்சரிசி மற்றும் தானியங்களை வைத்து வணங்கி, பின்னர் காப்பரிசியை கிராம மக்களுக்குப் பகிர்ந்து அளித்தனர். பின்னர் ஜோடி காளை மாடுகளைக் கொண்டு நல்லேர் பூட்டி விளை நிலத்தை உழுது, நடப்பாண்டில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும், விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் வழிபட்டனர்.

அப்போது அவர்கள், விவசாயத்திற்கு பயன்படக்கூடிய உபகரணங்களையும் வைத்து வழிபட்டதுடன், பெண்கள் கும்மியடித்தும், குலவையிட்டும் எந்த ஒரு இயற்கைப் பேரிடரிலும் விவசாயிகளும், விவசாயமும் பாதிக்கக் கூடாது என்றும், நாடு செழிக்க வேண்டும் என்றும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி வழிபட்டனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தின், கறம்பக்குடி தாலுகா, வாண்டான் விடுதியிலும் நல்லேர் பூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிதாக பிறந்திருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் விவசாயம் தழைக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், தங்களது ஆடு மாடுகளுக்குத் தீவனம் கிடைக்க வேண்டும், உணவுப் பொருள்கள் உற்பத்தி அதிகரித்து, பசி பட்டினி இல்லாமல் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக ஏர் கலப்பை, நிறைகுடம் போன்றவற்றை வைத்து காப்பரிசி படையல் செய்து பெண்கள் மற்றும் விவசாயிகள் பூமாதேவியை வழிபட்டனர்.

அதுமட்டுமல்லாமல், மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைத்து கால்நடைகளுக்கும் வழங்கினர். மேலும் இது தொடர்பாக எஸ்.குளவாய்பட்டி மக்கள் கூறுகையில், “தொன்றுதொட்டே பாரம்பரியமாக சித்திரை முதல் நாள் அன்று நல்லேர் பூட்டி வருகிறோம். இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் அன்று, மாடுகளை வைத்து ஏர் பூட்டி வழிபாடு செய்தோம். விவசாயம் என்பது நாட்டிற்கு முக்கியத்துவமானது.

அதை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் வகையிலும், நல்ல மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று வழிபட்டோம். வளரும் தலைமுறையினருக்கு விவசாயம் மற்றும் மாடுகளை வைத்து ஏர் பூட்டுதலை எடுத்துக் கூறும் வகையில் நல்லேர் பூட்டினோம். இதேபோல் தமிழ்நாடு முழுவதும், அனைத்து விவசாயிகளும் நல்லேர் பூட்டி விளைநிலத்தை வணங்கி, விவசாயத்தைப் போற்ற வேண்டும்” எனக் கூறினர்.

இதையும் படிங்க:Thiruneer Annamalaiyar: திருநீர் அண்ணாமலையார் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சி!

ABOUT THE AUTHOR

...view details