செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர் எம்.பி. புதுக்கோட்டை:இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மாநில ஆயுஷ் குழுமம் - தமிழ்நாடு மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் அரசினர் ஆயுர்வேத மருந்தகம் சார்பில் புதுக்கோட்டை பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சி மன்றத்தலைவர் பாபு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைப் பெற்றுச்சென்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், “கர்நாடகாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மோசமானதாக, ஊழல் நிறைந்த, மக்கள் நம்பிக்கை இழந்த ஆட்சியாக பாஜக ஆட்சி இருந்து வந்தது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தும் கர்நாடகாவில் எந்த ஒரு திட்டங்களையும் செய்யவில்லை.
கரோனா காலங்களில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.
ஆனால், எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் அனைத்து உதவிகளையும் செய்தது. இவை அனைத்தையும் மனதில் வைத்து தான் கர்நாடகாவில் காங்கிரசுக்கு பொதுமக்கள் ஆதரவளித்துள்ளனர். இந்த வெற்றி வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் தொடக்கமாகும்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு கர்நாடகா தேர்தல் முடிவு அடித்தளமாக அமைந்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதி கட்டத்தில் பாஜக தோல்வி பெறும் என்று எண்ணி பிரதமர் நரேந்திர மோடி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். ஆனால், கர்நாடகாவில் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், “கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி, அகில இந்திய பாஜகவுக்கு கிடைத்த தோல்வி, பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வியாகவே மக்கள் கருதுகின்றனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் மிகப்பெரிய ஒரு பங்களிப்பாக அமைந்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஒரு உந்துதலாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி