தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் செல்வாக்கை இழக்கிறதா திமுக? 30 வருடமாக திமுகவில் இருந்தவர்கள் கூறுவது என்ன? - திமுகவின் தடையை மீறி நடைபெற்ற நிகழ்ச்சி

புதுக்கோட்டையில் திமுகவில் இருந்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

புதுக்கோட்டையில் திருப்பம் காணும் அரசியல் களம்
புதுக்கோட்டையில் திருப்பம் காணும் அரசியல் களம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 6:55 AM IST

புதுக்கோட்டையில் செல்வாக்கை இழக்கிறதா திமுக? 30 வருடமாக திமுகவில் இருந்தவர்கள் கூறுவது என்ன?

புதுக்கோட்டை:நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்களது கட்சியினரை தக்க வைத்துக் கொள்வதிலும், மாற்றுக் கட்சியினரை கூட்டணிக்கு அழைப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுகவில் அதிருப்தியாளர்கள் அனைவரையும் முழுவதுமாக அதிமுக பக்கம் இழுக்க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மாற்றுக் கட்சியினரை அழைத்து வர சிறப்பான ஏற்பாடுகளும் தயாரானதாக கூறப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கட்சியிலும், அவரது தொகுதியிலும் அரசு அதிகாரிகள் மத்தியில் தனக்கென்ற தனி செல்வாக்கை கொண்டுள்ளார்.

புதுக்கோட்டையில் திருப்பம் காணும் அரசியல் களம்

இதையடுத்து, 2001ஆம் ஆண்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் 2011, 2016, 2021ஆம் ஆண்டுகளில் மூன்று முறை விராலிமலை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்டச் செயலாளர் காலில் விழுந்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் மீது கட்சியினர் உள்ளிட்ட பலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதன் முழுக்காரணமாக பார்க்கப்படுவது கோஷ்டி பூசல்.

இதில் மாற்று கட்சியில் இருந்து 500க்கும் மேற்பட்டோரை, குறிப்பாக திமுகவில் ஒன்றிய அளவில் 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அழைத்து, அதிமுகவில் இணைக்கும் பணி நேற்று (நவ.20) நடைபெற்றது. புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள காலாடிப்பட்டியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மண்டபத்திலிருந்து இருபுறமும் ஆளுயுர பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டது. மண்டபத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பிலிருந்து விஜயபாஸ்கர் தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு சப்தம் விண்ணைப் பிளக்க, ஆட்டம் பாட்டத்துடன் அழைத்து வரப்பட்டார்.

திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரை அதிமுக கட்சி கரைவேட்டி உடன் வரவேற்ற விஜயபாஸ்கர்:அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "நீங்கள் இவ்வளவு நாள் திமுக கட்சியிலிருந்து எந்த பலனையும் அனுபவிக்கவில்லை. தற்போதுதான் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையின் கீழ் வந்துள்ளதனால், உங்களுக்கான உரிய மரியாதையும், தங்கள் தகுதிக்கேற்ப பொறுப்புகளும் வழங்கப்படும். சிறப்பாக செயல்படுங்கள், எதிர்காலம் காத்திருக்கிறது" என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை உள்ளிட்ட உணவுகள் உடன் விருந்து நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சி திமுகவின் முக்கிய நிர்வாகிக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

திமுகவின் தடையை மீறி நடைபெற்ற அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி:கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதுக்கோட்டை, மாலையீடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், திமுகவினர் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் எச்சரிக்கை விடுத்தனர். இதன் விளைவாகவே, மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறதா என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிமுக பக்கம் சாய்ந்த திமுக நிர்வாகிகளின் கருத்து:இந்தச் சூழலை மேலும் பதற்றமாக்கும் விதமாக, திமுகவில் ஒன்றிய துணைச் செயலாளராக 30 வருடங்களாக பயணித்த அரும்பு, தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து அரும்பு ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது, “அன்னவாசல் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரன் மற்றும் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோரின் நடவடிக்கை சரியில்லாததால், தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளேன்.

ஒன்றியச் செயலாளர் எந்த ஒரு தொண்டனையும் மதிப்பதில்லை. திமுகவில் இருக்கக் கூடிய எந்த ஒரு தொண்டருக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த 30 வருடங்களாக திமுகவிலிருந்து கடினமாக உழைத்து, இந்த ஒன்றிய துணைச் செயலாளர் பொறுப்பிற்கு வந்துள்ளேன். ஆனால், ஒன்றியச் செயலாளர் யாரையும் மதிப்பதில்லை. மேலும், எங்களைப் போன்று பல்வேறு பஞ்சாயத்துகளில் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவிற்கு வர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தயாராக இருக்கின்றனர்.

அதேபோல் கட்சி நிர்வாகிகள் வீட்டில் விசேஷத்திற்கு பத்திரிக்கை வைத்தால் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் வருவதில்லை. இப்படி செய்தால் மற்ற கட்சியினர் எங்களை எப்படி மதிப்பார்கள்? ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாற்றுக் கட்சியினர் என்று கூட பார்க்காமல், அவர் வீட்டில் பத்திரிக்கை வைத்தால் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சிக்கு வந்து விடுவார்.

அதேபோன்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்னவாசல் ஒன்றியத்தில் 75 சதவீத வாக்குகளை அதிமுகவிற்கு பெற்று காண்பிப்போம். அதேபோன்று, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை வெற்றி பெறச் செய்து, மீண்டும் அவரை அமைச்சராக்குவோம்" என்றார்.

மக்களிடம் பதில் சொல்ல இயலாமல் கட்சி மாறிய நிர்வாகி: இதைத் தொடர்ந்து, 30 வருடங்களாக திமுக கிளைச் செயலாளராக இருந்து, தற்போது அதிமுகவில் இணைந்த சிவபெருமாள் பேசுகையில், "30 வருடங்களாக திமுகவில் இருந்து வருகிறேன். கட்சிக்காக பல்வேறு கட்டங்களில் நிதியும் அளித்துள்ளேன். எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், இரண்டு ஊராட்சி கவுன்சிலர்களை வெற்றி பெறச் செய்துள்ளேன். அவர்கள் வந்து எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. அப்போது மக்களிடையே பேசி, வாக்கு வாங்கி கொடுத்த மக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

இது குறித்து ஒன்றியச் செயலாளரிடம் தெரிவித்தால் பார்ப்பதற்கு கூட அனுமதிப்பதில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எந்த ஒரு கட்சியையும் பார்ப்பதில்லை. எந்த ஒரு அடிப்படைத் தேவைகளைச் சொன்னாலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் உடனடியாக செய்து கொடுக்கிறார். திமுகவுக்காக 30 வருடங்களாக உழைத்து எந்தவித பலனையும் அனுபவிக்கவில்லை. எனவே, தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளேன்" என்றார்.

திமுக ஒன்றியச் செயலாளர்:15 வயது முதல் திமுகவில் இருந்து, தற்போது அதிமுகவில் இணைந்த வெள்ளைச்சாமி நம்மிடம் பேசியதாவது, “15 வயது முதல் தற்போது 55 வயது வரை 45 வருடங்களாக திமுகவில் உழைத்து, இதுவரை எந்தவித ஒரு பலனையும் அனுபவிக்காமல் இருந்து வந்தேன். பாகுபாடின்றி எங்களுக்கு உதவி செய்யும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையின் கீழ், எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட அனைவரும் அதிமுகவில் இணைந்துள்ளோம். கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் ஆளுங்கட்சி என்ற முறையில் நாங்கள் இருந்து வந்தால், எங்களை ஒன்றியச் செயலாளர் மதிப்பதில்லை" என்றார்.

நிர்வாகிகளின் விலகலுக்கு விளக்கமளித்த திமுக செயலாளர்:இவ்வாறு பரவலாக திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததையடுத்து அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன் கூறியதாவது, “சம்பந்தப்பட்ட வீரப்பட்டி ஊராட்சியில் இருந்து திமுகவில் இருந்து இரண்டு பேரை அழைத்துக் கொண்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பூங்கொத்து கொடுத்து சந்தித்து, அதிமுகவில் இணைவு நிகழ்ச்சி நடைபெறும் என்று விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட வீரப்பட்டி ஊராட்சியில் இருந்து திமுக ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் அரும்புராஜ், திமுக உறுப்பினர் பழனிகண்ணு என இரண்டு பேர் மட்டுமே திமுகவிலிருந்து அதிமுகவிற்குச் சென்று சேர்ந்துள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட அரும்புபராஜ் என்பவர் வெட்டு சீட்டு, சூதாட்ட கிளப் வைத்து நடத்துபவர். அந்த சூதாட்ட கிளப் நடத்துவதற்கு ஆளுங்கட்சி அரசு உதவி வேண்டும், காவல்துறை உதவி வேண்டும் என கேட்டிருந்தார். அதற்கு திமுக தரப்பிலிருந்து எந்த வித ஆதரவும் கொடுக்கவில்லை. இதனால் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வந்தவர்.
அவருக்கு கட்சி ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதனால், இயக்கத்தை காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவிற்கு சென்று உள்ளார்.

இந்த சூழல் திமுகவிற்கு சாதகமா, பாதகமா?: இயக்கத்திற்கு உழைக்கும் தொண்டர்கள் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. திமுக தலைவரை பொறுத்தவரை, கட்சியினரைவிட பொதுமக்களுக்கு நலன் சார்ந்த விஷயங்களை செய்வதுதான் முக்கியம். தனிப்பட்ட நபர்களின் சொந்த வருமானத்திற்காக திமுக என்றும் துணை போகாது.

திமுக தலைமையிடம் சொல்லும் பணிகளை யார் சிறப்பாக செய்கிறார்களோ, அவர்களுக்குதான் பணியும் பொறுப்பும் வழங்கப்படும். ஏமாற்றுபவர்களையும், திருட்டுத்தனம் செய்பவர்களையும் கட்சியில் வைத்துக் கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details