புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை முறை குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தனியார் வங்கி வழங்கியுள்ளது. அவை மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருவது நிம்மதி அளித்தாலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். கறுப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளைத் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் விருப்பப்படி செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை உடனடியாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதியை நேரில் சந்தித்த அவர், நோயாளிகளுக்குச் சத்தான உணவை அளிக்க வேண்டுமென்றும், கரோனா நோயாளிக்கு துணைக்கு உதவிக்கு வருபவரைக்கும் நல்ல உணவு வழங்க வேண்டும் என மனு அளித்தார்.