புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் படித்து 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கவுள்ள 11 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த நிதியிலிருந்து மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கை கட்டணத்தை வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சியர் மகேஸ்வரி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, "முதலமைச்சர் பழனிசாமி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி சாதனை படைத்துள்ளார். இந்த உள் ஒதுக்கீட்டின்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற 11 மாணவ, மாணவியர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இந்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த 5 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததற்கும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலவுள்ள 3 மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த 11 மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி கல்வி கற்கும் வகையில் சேர்க்கை கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களுக்கு சிவிபி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 5லட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:7.5% இட ஒதுக்கீடு: ஆளில்லாமல் 6 இடங்கள் காலி