புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக பிறந்த குழந்தை மற்றும் தாய் ஆகியோரைக் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் புதிய சித்த மருத்துவப் பிரிவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழ்நாட்டில் பல்வேறு ஆண்டுகளாக போலியோ நோய் என்பதே கிடையாது. தமிழ்நாடு 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது தான்.
தடுப்பு மருந்தால் குணப்படுத்த கூடிய நோய்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவது தான் அரசின் கொள்கை. தடுப்பு மருந்து வரும் போது அதோடு சேர்ந்து வதந்திகளும் வருவது இயல்பு, அதைத் தவிர்க்க வேண்டும் என்பது தான் எனது கருத்து. கரோனா காலகட்டமாக இருந்தாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்தவிதமான தயக்கமும் இன்றி போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு பெற்றோர்கள் முன் வரவேண்டும்.