புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேம்பங்குடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் சேவையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
முன்னதாக அம்மா மினி கிளினிக்கைத் திறந்துவைக்க காரில் வருகைதந்த அமைச்சரை, டிராக்டர் மூலம் வரவேற்பு அளிக்க விவசாயிகள் காத்திருந்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி பின்னர் காரிலிருந்து இறங்கிய அமைச்சர் தொண்டர் ஒருவரிடம் இருந்து பச்சைத் துண்டை வாங்கி கழுத்தில் போட்டுக்கொண்டு, டிராக்டரை அவரே ஓட்டிவந்தார்.
டிராக்டரை அமைச்சர் ஓட்டிவந்த நிகழ்வைப் பார்த்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து பெண் தொண்டர்கள் மலர்களை அமைச்சரின் மீது தூவி வரவேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "உலகமே பாராட்டக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் முழுமையாக கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் 2000 மருத்துவர்கள், 2000 செவிலியர், 2000 உதவியாளர்கள் ஆகியோர் ஓரிரு வாரங்களில் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இதுவரை தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 980 மினி கிளினிக்குகள் பயன்பாட்டில் உள்ளன. ஓரிரு வாரங்களில் முழுமையாக 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மக்களுக்கு கொடுப்பது எல்லாம் அதிமுக; கெடுப்பது திமுக - ராஜேந்திர பாலாஜி