தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு - புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

புதுக்கோட்டை: கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

By

Published : Jan 13, 2021, 9:19 PM IST

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் இன்று (ஜனவரி 13) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் தொடர் மழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் பொது மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக கூறிய அமைச்சர், தற்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வாய்க்கால், பெரியார் நகர், கம்பன் நகர் வரத்து வாய்க்கால்கள், சந்திரமதி கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் செல்லும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே நகராட்சி சார்பில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் குளங்கள், வரத்து வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் மழைநீரில் பாதிப்படைந்தது தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details