புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பனங்குடியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று (செப்.27) அம்மா நகரும் நியாய விலைக்கடையினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாடு முதலமைச்சர், கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொது மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 9,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நகரும் நியாய விலைக்கடைகள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றின் மூலம் சுமார் 10,000க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே பொருள்களைப் பெற்று பயன்பெறுவதுடன், நீண்ட தூரம் சென்று அத்தியாவசியப் பொருள்களை பெறும் போக்கும் தவிர்க்கப்படும்.
‘அரசைத் தேடி மக்கள்’ என்ற நிலை மாறி, ’மக்களைத் தேடி அரசு’ என்ற நிலை உருவாக்கப்பட்டதன் அடிப்படையில், இன்றைய தினம் பனங்குடியில், அம்மா நகரும் நியாய விலைக்கடை பொது மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது.
அம்மா நகரும் நியாய விலைக்கடையினை தொடங்கி வைத்து, பொருள்கள் விநியோகித்த அமைச்சர் விஜயபாஸ்கர் மண்ணவேலாம்பட்டியில் இருக்கும் பனங்குடி அங்காடி 385 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் பனங்குடியில் திறக்கப்பட்ட நகரும் நியாய விலைக்கடை அங்காடியானது, பனங்குடி தாய் அங்காடியிலிருந்து 180 குடும்ப அட்டைகளைப் பிரித்து நகரும் நியாய விலைக்கடை அங்காடியாக செயல்பட உள்ளது. இதன் பயனாக 180 குடும்ப அட்டைதாரர்கள், 1.5 கி.மீ தூரம் சென்று பொருள்கள் பெற்று வந்த நிலைமாறி, அவர்களது இருப்பிடங்களிலேயே அத்தியாவசியப் பொருள்களைப் பெற்று பயன்பெற உள்ளனர்.
இந்த நகரும் நியாய விலைக்கடையில் அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை ஆகியவை விலையில்லாமலும், இரண்டு கிலோ சர்க்கரை, இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்படும்.
மேலும், பனங்குடி பொதுமக்களுக்கு சாலை வசதி, கலையரங்கம், மின்சார வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பொது மக்களின் பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே தமிழ்நாடு அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பொது மக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்” எனப் பேசினார்.