திமுக ஆட்சி காலத்தில் வாழ்வது கலைஞர் குடும்பம் தான்; தமிழகமே கலைஞர் குடும்பம் தான் - உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை:திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. அதற்காக இளைஞர் அணி தொண்டர்களை அழைக்கும் வண்ணம் புதுக்கோட்டையில் இளைஞர் அணி செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மாநாட்டு நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நிதியை அமைச்சர் ரகுபதி, உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். விழாவில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "திமுக விழாக்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை முதலில் நிறைவேற்றிய மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது.
இந்தியாவிலேயே முதன் முதலில் இளைஞர்களுக்கு என்று ஒரு அணி தொடங்கிய கட்சி திமுக. புதுக்கோட்டை எப்போதுமே திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. வாடிவாசலுக்கும், நெடுவாசலுக்கும் பெயர் போன மாவட்டம் தான் புதுக்கோட்டை. ஸ்டாலின் உழைப்பின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகி உள்ளார். மற்றவர்களை போல் டேபிளுக்கு அடியில் புகுந்து முதல்வரானர் அல்ல ஸ்டாலின்.
டிசம்பர்-17 இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். சேலம் மாநாடு வெற்றி மாநாடாக அமைய வேண்டும். 20ஆம் தேதி ஒரு கட்சியின் மாநாடு நடைபெற்றது. எதற்காக அந்த மாநாடு நடைபெற்றது. ஏன் அந்த மாநாடு நடைபெற்றது என்று தெரியவில்லை.
அதிமுக மாநாட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை என்று அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெயக்குமாரிடம் விசாரிக்க வேண்டும், ஏன் என்றால் அவர் தான் மாநாட்டு பொறுப்பாளர். மணிப்பூரில் கலவரத்தை தடுக்க தவறியது பாஜக.
ஆனால் மணிப்பூரில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற வேண்டும் என்று அவர்களை தமிழகத்தில் பயிற்சி எடுக்க வருமாறு முதல்வர் அழைத்து, அதன்படி 18 விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் வந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதுதான் திராவிடத்திற்கும் ஆரியத்துக்கும் உள்ள வேறுபாடு.
பிரதமர் மோடி குற்றம் சாட்டுவது போல் திமுக ஆட்சிக்கு வந்தால் வாழ்வது கலைஞர் குடும்பம் தான், ஏன் என்றால் இங்கு ஒட்டு மொத்த தமிழக மக்களும் கலைஞர் குடும்பம் தான். மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர் தான். உலக பணக்கார் பட்டியலில் 2 ஆவது இடத்தில் அதானி இருக்கிறார். சிஏஜி அறிக்கையின் மூலம் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கி உள்ளன.
கோவிட் காலக்கட்டத்தில் பிரதமர் பிஎம் கேர் ஃபண்டு என்று தொடங்கி பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டினார். அதற்கு கணக்கு கேட்டால், எந்தெந்த துறைகளுக்காக செலவு செய்துள்ளீர்கள் என்று கணக்கு கேட்டால் அதனை தர மறுக்கின்றனர். அதிமுக - பாஜக கட்சிகளை ஒழிக்கும் நேரம் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல். பாஜகவை விரட்ட வேண்டுமென்றால் அதிமுகவை ஒழிக்க வேண்டும். அதிமுகவை ஒழிப்பதற்காக தான் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: K Annamalai: "ஊழலின் உறைவிடம் திமுக - அண்ணாமலை விமர்சனம்