புதுக்கோட்டை:மாமன்னன் திரைப்படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியது சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பது பற்றி எங்களது வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள். நிச்சயமாக சொல்கிறோம், ஒருவரை அமைச்சரவையில் வைத்துக் கொள்வதும், நீக்குவதற்கும் முழு அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உண்டு. அவரது விருப்பம்தான் இறுதி முடிவு.
ஆளுநர் செந்தில் பாலாஜியை நீக்கியது பற்றி நாளை முடிவு எடுக்கப்படும். ஆளுநரின் இந்த நடவடிக்கையைப் பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. ஆளுநருக்குள்ள அதிகாரம் என்ன என்பது பற்றி தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. அவர் யாருக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்கின்றார் என்பதும் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை, ஆளுநர் எடுத்த நடவடிக்கைக்கு நிச்சயமாக சரியான பதிலை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிப்பார்.
இந்திய நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் தெரியும். அந்த அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. ஒரு ஆளுநருக்கு அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ எந்த அதிகாரமும் இல்லை. ஆளுநர் எங்களுடைய அறிவுரைப்படிதான் நடக்க வேண்டும். ஆனால், நான் ஒருவரை நீக்குகின்றேன், வைத்துக் கொள்கின்றேன் என்று கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர்கள், ஒவ்வொரு அமைச்சர்களாக நீக்குவேன் என்று சொன்னால் நீக்க முடியுமா அல்லது சேர்க்க முடியுமா? இது ஜனநாயக நாடாம் இல்லை சர்வாதிகார நாடா? அதிமுக போன்ற கட்சிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமைகளாக இருக்கின்ற கட்சிகள் மீது அமலாக்கத் துறை வேண்டுமென்றே வழக்குகள் போட்டு நடவடிக்கை எடுத்து, அவர்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.