புதுக்கோட்டை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோப்பு ஆளுநர் மாளிகையில் அனுமதி அளிக்காமல் வைத்துள்ளது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகைக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு நேற்று ஆளுநர் தனது பதிலை பத்திரிக்கை செய்தி மூலமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆளுநரின் செய்திக் குறிப்பு குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நான் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்படவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு பத்ததிரிகைக் குறிப்பு மட்டுமே வந்துள்ளது. அதில் லீகல் இன்வஸ்டிகேசன் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற நினைக்கிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாரை நாங்கள் அனுப்பி இருந்தோம். ஆனால், ஆளுநர் அதற்கான முறையான பதிலை தராமல் மழுப்பலான பதிலை கூறியுள்ளார். லீகல் இன்வஸ்டிகேசன் என்று இரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற தந்திரமான நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார். ஆளுநர் மாளிகையிலிருந்தே உண்மைக்கு புறம்பான தகவல் வெளி வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்கட்சியாக அதிமுகவோ, பாஜகவோ செயல்பட முடியாத காரணத்தினால், ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு ஆளுநர் சனாதனத்தை கையில் எடுத்து பேசி வருகிறார். அவர்தான் எதிர்கட்சி போன்று செயல்பட்டு வருகிறார்.
ஆளுநர் இரட்டை வேடம் போடுகிறார். ஒருபுறம் நடவடிக்கை எடுக்க தடையாகவும், திமுக மீது நடவடிக்கை எடுக்கும்படியும் செயல்பட்டு, திமுகவை அஞ்ச வைக்கலாம் என்று எண்ணுகிறார். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கும் அஞ்ச மாட்டார்.