புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தனர்.
இந்த கருத்தரங்கில் 2024 உலக முதலீடுகள் மாநாட்டிற்கு தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு கடனுதவித் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், "உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா மீதான குட்கா வழக்கு விசாரனையைத் தொடர ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார். ஆளுநர் 13ஆம் தேதி அனுமதி அளித்ததை அன்றே சொல்லி இருந்தால் நாங்கள் ஏன் கூட்டம் போட போகிறோம்.
தமிழக ஆளுநர் கடைசியாக அனுப்பப்பட்ட 5 மசோதக்களை நிறுத்தி வைத்துள்ளார். 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பி உள்ளார். தமிழசை சௌந்தரராஜன் தெலங்கானவில் போய் அங்குள்ள முதலமைச்சரோடு இணக்கமாக போகட்டும். அதன் பின்பு தமிழகத்திற்கு அறிவுரை கூறட்டும். குட்கா வழக்கில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று சிபிஐக்கு நாங்கள் தகவல் தெரிவிப்போம். அதன் பின்பு சிபிஐ விசாரணை தொடங்குவார்கள்.