புதுக்கோட்டை:புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. பெரும்பாலும் இவர் புதுக்கோட்டையில் நடைபெறும் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கும், நேரம் தவறாமல் பங்கேற்றுக்கொள்வார். ஆனால், மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் அவருக்கு எதிர் மாறாக அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறிது தாமதமாக சென்று, சங்கடத்தை ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், மாவட்டச் செயலாளர் தாமதமாக வருவதால், அவ்வப்போது அமைச்சர் ரகுபதி மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் மீது மேடைகளிலே கோபப்படுவதும் உண்டு. இந்நிலையில் இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நகரச் செயலாளர் செந்தில் தலைமையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் அமைச்சர் ரகுபதி, அண்ணா சிலை அருகே வருகை தந்து நிகழ்ச்சிக்காக காத்திருந்தார். ஆனால் வழக்கம் போல் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தாமதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை வழங்கும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பங்கேற்கவிருந்த நிலையில், தாமதப்படுத்திய மாவட்டச் செயலாளர் மீது கடும் கோபம் கொண்டதாகத் தெரிகிறது.