புதுக்கோட்டை: ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும் நிகழ்வு, திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. அப்போது ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதியிடம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் வழங்கினர்.
காசோலையை பெற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக கோவிட் நோய்த்தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. கோவிட் காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
மேலும் பல்வேறு தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் தாமாக முன்வந்து நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிவருகின்றன.
அதன்படி திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர், சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று, பழமையான திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், புதிதாகக் கட்டி திறக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருமயத்தில் சித்த மருத்துவப் பிரிவு அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைத்து, செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் எவ்வித கட்சி பாகுபாடுமின்றி, தங்களது ஊராட்சிகளுக்குள்பட்ட பொதுமக்களின் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அனைத்துவித அடிப்படை வசதிகள் கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் வனவிலங்குகளுக்கு கரோனா இல்லை - அமைச்சர் கா. ராமச்சந்திரன்