தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை அணவயல் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்!

புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் அரசு பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

அணவயலில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி..அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
அமைச்சர் மெய்யநாதன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 1:09 PM IST

அணவயல் அரசு மேல்நிலைப் பள்ளி

புதுக்கோட்டை:அணவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அணவயல், நெடுவாசல், வடகாடு, அரையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டார்.

அணவயல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு, பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியும், பரதநாட்டியங்களை ஆடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மரக்கன்றுகளை நடவு செய்து, பின்னர் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, "ஆசிரியர்கள் தந்த கல்வி தான் ஒரு மாணவனை வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது. ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற கூடியவர்கள். மேலும், பள்ளிக்கூடம் என்பது திருக்கோயில் போன்றது அப்படிப்பட்ட பள்ளி வளாகத்திற்குள் வேறுபட்ட கருத்துக்களோடு குறிப்பாக அரசியல் கருத்துக்களோடு எவரும் வரக்கூடாது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் பிறந்த ஊரான மறமடக்கியிலும், வெளியிலும் பல்வேறு முரண்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் இருந்தாலும் பள்ளிக்குள் எந்தவித அரசியல் கருத்துக்களையும் பேச மாட்டோம். ஆசிரியர்கள் கேட்டதை செய்து கொடுத்து விட்டு வருவோம்" என்று கூறினார்.

மேலும், "அரசு முன்மாதிரி பள்ளியில் படிப்பை முடித்து பின்னர் முதுகலை பட்டம் பெற்ற தன்னால் உலகத்தில் எந்த இடத்திலும் வேலை செய்வதற்கான கல்வி சான்றிதழ் உள்ளது. கல்வி என்ற ஆயுதம் நமது கையில் இருந்தால் உலகத்தில் எந்த உயரத்திற்கும் நாம் செல்ல முடியும். தடைகளை கடந்து மாணவர்கள் வாழ்வில் தடம் பதிக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அறந்தாங்கி ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரி, திருவரங்குளம் ஒன்றிய குழுத் தலைவர் வள்ளியம்மை, மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:காங்கிரஸ் நிர்வாகி உருட்டுகட்டையால் அடித்து கொலை... சொத்துத் தகராறில் தாய், தம்பி வெறிச்செயல்!

ABOUT THE AUTHOR

...view details