புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயிலரங்கத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசுகையில், "காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சினை. பசுமை தமிழகம் ஏற்படுத்துவதற்காகத்தான் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் வருடத்திற்கு 10 கோடி மரங்கள் வளர்ப்பது திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 50 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். உலக வெப்பமயமாதல் நிகழ்வால் தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று அறியப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அதிக அளவில் பனை மரங்கள் வளர்ப்பதற்கு அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அலையாத்தி காடுகளை உருவாக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதும், 243 குப்பைக் கிடங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயோ மைனிங் முறைப்படி குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 53 பணிகள் முடிவுற்று, 253 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.