புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தை அடுத்த வல்லத்திராகோட்டை இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, "ஆசிரியர்களை மாணவராகிய நாம் மதித்து நடக்க வேண்டும். இன்றும் எனது ஆசிரியர்களை நான் மதித்து நடந்து கொள்கிறேன். அதனால் தான் நான் அமைச்சர் என்ற உயர் பொறுப்பில் இருக்கிறேன். கல்வியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் இடங்களில் மாணவிகள் உள்ளனர்.
இது மிகவும் பெருமையாக உள்ளது. ஆனால் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் படிக்க முடியாத நிலை இருந்தது. இதை மாற்றி அமைத்தவர் தந்தை பெரியார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசுப் பணிகளில் பெண்கள் அதிக அளவு இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அரசுப்பணிகளில் அமர்ந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் அளித்த இலவச உயர் கல்வி திட்டத்தில் பயின்று தான் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.