புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் தொடங்கப்படும் மூன்றாவது பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை, நேற்று (நவ.15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
அதேநேரம், புதுக்கோட்டையில் நடந்த பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழாவில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, “முன்னாள் முதலமைச்சர் என்னவென்று தெரியாமல் பேசுகிறார். எதையும் தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுகிறார். எதிர்கட்சித் தலைவர் என்பது பொறுப்பான பொறுப்பாகும். ஆனால், அவர் இது போன்று செயல்படுவது அவரின் அறியாமையையும், நிர்வாகத் திறமையின்மையையும் காட்டுகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 120 மருத்துவமனைகள், எச்.ஆர் என்ற மருத்துவப் பணிகள் உருவாக்காமல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு தரம் உயர்த்தினால், தரம் உயர்த்தப்பட்டதாக அர்த்தம் இல்லை. பெயர் பலகை மட்டுமே மாட்டிக்கொள்ள முடியும். மருத்துவமனை தரம் உயர்த்தி விட்டு, இரண்டரை ஆண்டுகளாக மருத்துவர்களை தற்போதைய ஆட்சியாளர்கள் நியமிக்கவில்லை என்ற தவறான தகவலை, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சியில் 10,250 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மருத்துவத் துறையில் காலியாக இருந்த டைப்பிஸ்ட், ஓஏ உள்ளிட்ட 986 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும், மருத்துவத் துறையில் தொடர்ந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.