தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்ட தொழில் பிரிவு பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (அக்.23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிரதமர் புகைப்படத்துடன் நிர்வாகிகள் எடுத்துச் செல்வதாக அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி நிர்வாகிகளை அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்திருந்தார். தொழில் பிரிவு மாநில செயலாளர் செல்வம் அழகப்பன் முன்னிலையில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பிரதமர் உருவ படத்தை எடுத்துக்கொண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.
இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், தாசில்தார் முருகப்பன், திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் கௌரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்த பின்பு இதுகுறித்த முடிவை வெளியிடுகிறோம் என அரசு அலுவலர்கள் கூறினர். நாளை மறுநாளுக்குள் நல்ல பதில் சொல்ல வேண்டும், இல்லையெனில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகப் பெரிய போராட்டங்கள், சாலை மறியல் நடத்தப்படும் என நிர்வாகிகள் எச்சரித்தனர்.