புதுக்கோட்டை: போஸ் நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் என்பவரது மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீன நாட்டில் உள்ள QIQIHAR MEDICAL UNIVERSITY பல்கலைக்கழகத்தில் 2017-18ஆம் மருத்துவப் படிப்பு படிக்கத் தொடங்கி தேர்ச்சியும் பெற்றுவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கரோனா பாதிப்பு இருந்ததால் ஆன்லைன் மூலமாகவே கல்வியைக் கற்று முடித்த மாணவர் ஷேக் அப்துல்லா, மருத்துவப் பயிற்சிக்காக கடந்த 11ஆம் தேதி மீண்டும் சீனா சென்றுள்ளார்.
பின்னர் அந்நாட்டின் விதிமுறைப்படி எட்டு நாட்கள் கரோனாவின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்ட ஷேக் அப்துல்லா, அதன்பின் தனது பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். இதன் பின் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஷேக் அப்துல்லாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவர் ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் தகவல் வந்துள்ளது.
தற்போது சீனாவில் மாறுபட்ட ஒமைக்ரான் வகை கரோனா மிக வேகமாகப் பரவி வருவதால் பதற்றம் அடைந்த அவனது பெற்றோர், அங்கு இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்றும்; கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சையினை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாகவும்; மருத்துவ செலவுக்குத் தேவையான பணத்தை அனுப்பி வைக்குமாறும் அங்கிருந்து கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவரது தந்தை சையது அபுல்ஹாசன், உறவினர்களிடம் கடன் வாங்கி ரூபாய் 6 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். தன் மகனை எப்படியாவது உயிருடன் ஊருக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் அதன் பின் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஷேக் அப்துல்லாவின் பெற்றோர்கள் கோரிக்கை மனுவும் அனுப்பி இருந்தனர்.