புதுக்கோட்டை மாவட்டம் கம்மங்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சின்னத்தாள் என்பவர் நோய்த்தொற்று காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் குழு அவருக்கு ரத்தத்தில் நோய்த்தொற்று இருப்பதையும் இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை செயல் குறைந்தும் இருப்பதை கண்டறிந்தனர்.
எனவே ரத்த அழுத்தத்தை சீராக்கி அதற்கான மருந்து அவருக்கு உடனடியாகச் செலுத்தப்பட்டது. ஆனால் நோய்த்தொற்றின் காரணமாக அவருக்கு ரத்தம் உறைவது குறைந்து காணப்பட்டது. எனவே நோயாளிக்கு அனைத்து இடங்களிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இந்த ரத்தம் உறைதலை சீர் செய்வதற்காக, ரத்த காரணிகளான கிரையோபிரேசிப்பிடேட் என்ற திரவம் செலுத்தப்பட்டது.
மேலும் 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஃபேக்டர் 8 எனும் காரணியும் அவருக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது. நோயாளி மூச்சுவிட சிரமப்பட்ட காரணத்தினால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருதயத்திற்கு அருகில் உள்ள பெரிய ரத்தக்குழாய் மூலமாக திரவங்களும் ரத்த காரணிகளும் செலுத்தப்பட்டன.
ஆறு நாள்கள் செயற்கை சுவாசம் அளித்த நிலையிலும் நோயாளி குணமாகததால் கழுத்தில் துளையிட்டு டிரக்கியாஸ்டமி குழாய் மூலமாக 23 நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அகநோக்கியின் மூலம் மூச்சுக்குழாய் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டது. இப்போது நோயாளி குணமடைந்து இன்று வீடு திரும்புகிறார்.