புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி செயல்பட்ட 18 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கள்ளச் சந்தையில் மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 24 மணி நேர மது விற்பனை குறைந்து உள்ளது. இதனால் புதுக்கோட்டையின் நகர் பகுதியிலும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மது விற்பனையும் சற்று குறைந்து உள்ளது. மது பிரியர்கள் அரசு மதுபான கடை திறக்கப்படும் நேரமான பகல் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், புதுக்கோட்டை, டிவிஎஸ் கார்னர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடம் காலை 11 மணியில் இருந்து இரவு 11 மணி வரை செயல்பட்டு வருகிறது. அரசு மதுபான கடை திறக்கப்படும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தனியார் மதுபான கடை திறக்கப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் காலையிலிருந்து தனியார் மதுபானக் கூடம் முன்பு குவியத் தொடங்குகின்றனர்.
மேலும், பகல் 11 மணியை நெருங்கும் வரை காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இது மட்டுமின்றி 11 மணி நெருங்கும் போது தனியார் மதுபானக் கூடத்தின் முன் கதவை தட்டிக் கொண்டும், சப்தமிட்டுக் கொண்டும் மது பிரியர்கள் காத்திருக்கின்றனர்.