புதுக்கோட்டை:ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், எலுமிச்சை பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
கரோனா பீதியால் கொள்முதல் குறைவு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எலுமிச்சை விளைச்சல் அதிகம். ஆனால் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் எலுமிச்சையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
பாதிக்கும் கீழ் குறைந்த எலுமிச்சை விலை
கரோனா ஊரடஙகிற்கு முன்பு எலுமிச்சம்பழம் கிலோ ரூ. 70இல் இருந்து 80 வரை விற்கப்பட்டது. தற்போது அதிக விளைச்சல் இருந்தும், ஒரு கிலோ ரூ. 15இல் இருந்து ரூ.17 வரை மட்டுமே விற்கப்படுகின்றன.
எலுமிச்சை பழத்தின் விலை வீழ்ச்சியால் வேலையாட்களுக்கு கூலி கூட கொடுக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் எலுமிச்சை பழத்தை மரத்திலேயே பறிக்காமலேயே விட்டுவிடுவதாகவும் அவர்கள் கூறினர். எனவே இதுபோன்ற காலங்களில் எலுமிச்சைபழத்தை பதப்படுத்தி வைக்க குடோன் அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை