புதுக்கோட்டை: நத்தம்பண்ணை ஊராட்சியில், பகுதிநேர நியாய விலைக் கடையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, கடந்த முறை ஆட்சி செய்தவர்கள் தொடங்கிய திட்டத்தை ஆட்சி செய்பவர்கள் திறந்து வைப்பது வழக்கமான ஒன்று.
எடப்பாடி பழனிசாமி கூறுவது போன்று, அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கிய திட்டத்தைதான் நாங்கள் தொடங்கி வைக்கிறோம் என்று கூறுவது தவறு. கிங்ஸ் மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. ஒரு சில திட்டங்கள் மட்டும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். அது இயற்கையான ஒன்று” என்று கூறினார்.
ஆளுநர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஒரு ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு அளவுகோல் உள்ளது. ஆனால், தமிழக ஆளுநர் வரம்பு மீறி பேசியதற்கு டி.ஆர்.பாலு விளக்கம் கொடுத்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்கள் ஆகியோர்களுக்கு நினைவு மண்டபங்கள் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அவர்களது நினைவு விழாவை நடத்தி வரும் ஒரே அரசு, திமுக அரசு.