சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு புதுக்கோட்டை:கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று (ஜனவரி 09) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டையில் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
250 விளையாட்டு வீரர்களுடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி ரயில் நிலையம், ரவுண்டானா, மாலையிடு, டிவிஎஸ், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி சாலை, அண்ணா சாலை, நகராட்சி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டு வளாகத்தை வந்து அடைந்தது.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பில்கிஸ் பானு வழக்கு தொடர்பான கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிக்கின்ற உரிமை யாருக்கும் கிடையாது. சரியா, தவறா எனவும் விமர்சிக்கின்ற உரிமை தனி நபருக்கு கிடையாது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் எந்த அவசர கதியில் கொண்டுவரப்பட்டாலும் நிச்சயமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கொண்டுவரப்பட முடியாது. அதற்குப் பிறகு இந்தியா கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
போக்குவரத்து தொழிலாளர்களின் 6 கோரிக்கைகளில் இரண்டை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையின் போது பொங்கலுக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு எந்த மறுப்பும் அரசு தெரிவிக்கவில்லை.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பது பற்றி பிறகு தான் தெரியும், அதற்குள் போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. பொங்கலுக்கு பிறகு தான் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணுவோம் என்று அமைச்சர் கூறிய நிலையில் அதற்கு முன்னரே பேச்சுவார்த்தை தோல்வி என தொழிற்சங்கங்கள் அறிவித்துவிட்டது. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே இத்தகைய சிறப்பு மிகுந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்ததாக வரலாறு கிடையாது. 6.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குத் தொழில் முதலீட்டாளர்கள், முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளனர். இது மட்டுமின்றி 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர இருக்கிறார்கள். படித்த இளைஞர்களுக்குப் பொற்காலத்தை உருவாக்குவதற்காக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினை பாஐக தலைவர் அண்ணாமலை விமர்சித்து வரும் நிலையில், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துச் செல்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, அவருக்கு உண்மை தெரிந்துள்ளது சொல்லி இருக்கிறார். மற்றவர்களுக்கு அதை ஏற்றுக் கொள்ள மனமில்லை. அதனால், மறுத்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் போராடும் மன உறுதி அளிக்கும்" - மு.க.ஸ்டாலின்