புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள லட்சுமணன் பட்டியில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினார்.
சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் தாவிக் குதித்து ஓடின. இதில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி, கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர்.