தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாடு செழிக்க வேணும்... நல்ல மழை பெய்ய வேணும்... அதுக்கு ஊரில் தேரும்தான் ஓட வேணும்!'

'ஊரோட வீதிகளின் பெயர்களில் மட்டும் தான் 'ரதம்' இருக்கு. வீதிகளிலே ஓடின ரதத்தை (தேரை) தான் காணவில்லை. 60 வருஷமா தேர் ஓடாத ஊருல, மறுபடியும் தேரோட்டம் நடத்த அந்த உத்தமநாதரும், பிரகதாம்பாளும் தான் அருள்புரிய வேணும்' நம்பிக்கையும் பக்தியுமாக பேசுகின்றனர், புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் மக்கள்.

car-festival
car-festival

By

Published : Nov 9, 2020, 1:14 PM IST

Updated : Nov 19, 2020, 3:40 PM IST

புதுக்கோட்டை :'ஊர் கூடினால் தேரிழுக்கலாம்' கிராமப்புறங்களில் இப்படி ஒரு சொலவடையுண்டு. மக்களின் ஒற்றுமையைக் குறிக்க சொல்லப்பட்ட இந்த வார்த்தை, தமிழ்நாடு முழுவதும் தேரோடி செழித்திருந்தது என்ற வரலாற்றையும் உணர்த்தி நிற்கிறது.

ஆண்டு முழுவதும் ஆலயத்தில் வந்து தன்னை தரிசித்துச் செல்லும் பக்தர்கள், திருவிழா காலத்தில் கடவுளே பக்தர்களை நேரில் வந்து சந்திக்கும் உற்சவம் தான், தேராட்டம்.

கடவுளின் ஐந்தொழில்களில், அழித்தல் தொழிலை தேர் திருவிழா குறிக்கிறது என புராணங்கள் சொன்னாலும், நாடு செழித்து, நல்ல மழை பெய்ய காரணமே, 'தேர் திருவிழா' தான் என்பது வெகுமக்களின் நம்பிக்கை!

ஒருகாலத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள பெருந்தெய்வக்கோயில்களில் தேரோடியிருந்தாலும், இன்று பல ஊர்களில் தேர் நிலைகள் மட்டுமே (நிறுத்துமிடங்கள்) நினைவுச் சின்னங்களாக கண்முன் நிழலாடுகின்றன.

'புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பெரிய தேரோடும் வீதியைக் கொண்டது, எங்க ஊரு. அந்த அளவுக்கு பெரிய தேர் இருந்த ஊரு. இன்னைக்கு ரதவீதிங்கிற பேரு மட்டும் தான், தேர் ஓடினதை நியாபகப்படுத்திட்டிருக்கு. மறுபடியும் இந்த மண்ணுல... தேர் ஓட அந்த உத்தமநாதரும், பிரகதாம்பாளும் தான் அருள்புரியணும்' - விரக்தியும், நம்பிக்கையுமாக ஊர் விவரம் பற்றி விவரிக்கிறார், முருகபிரசாத்.

புதுக்கோட்டை உத்தமநாதர் கோயில்

புதுக்கோட்டை மாவட்டத்திருலிருந்து, 25 கி.மீ., தள்ளியிருக்கிறது கீரனூர். இங்கிருக்கும் உத்தமநாதர் உடனுறை பிரகதாம்பாள் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருவிழாக்காலங்களில் பெரிய ரத வீதிகளை அடைத்து, தேரில் வலம் வந்த உற்சவ உத்தமநாதர், இன்று நான்கு ரப்பர் பைதாக்கள் பொருத்தப்பட்ட இரும்பு வண்டியில் வலம் வருகிறார்.

'கல்வெட்டுகளில் இந்த ஊரோட பெயர் உத்தமநாதபுரம். சுவாமியின் பெயர் உத்தமநாதர். வைகாசி மாத பவுர்ணமி விசாகத்தில் கோயிலில் திருவிழா நடக்கும். தேருல உலா வந்த சுவாமி, இப்போ வண்டியில் ரத வீதியைச் சுற்றி வருகிறார்' என வேதனை தெரிவிக்கிறார், தன் சிறுவயதில் தேர் ஓடிப்பார்த்த கோயில் குருக்கள் துரைசாமி.

கடந்த, 11ஆம் நூற்றாண்டின் இறுதியில், புதுக்கோட்டையை ஆண்ட, உத்தமதாணி முத்தரைய மன்னனால் கட்டப்பட்ட இந்தச் சிவன் கோயில், ரகுநாத ராய தொண்டைமான் மன்னர் காலத்தில் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது முதல் சிறப்பாக நடந்து வந்த தேர் திருவிழா நாளடைவில், தேர் பராமரிக்கப்படாததால், கடைசியில் இல்லாமலேயே போயிருக்கிறது.

'கீரனூருல உள்ள பழமையான சிவன் கோயில்ல, மாவட்டத்தோட பழமையான, பெரிய தேர் இருந்துருக்கு. இயற்கைச் சீற்றத்துல சேதமடைஞ்ச அந்த தேர், இப்போ இல்லாமலேயே போயிருச்சு. பழமையான இந்த உத்தமநாதர் கோயில் ரதவீதிகள்ல மறுபடியும் தேர் ஓடணுங்கிறது தான் மக்களோட விருப்பமா இருக்கு. அதுக்கான முயற்சிகள்ல நாங்க இப்போ ஈடுபட்டிருக்கோம்' என்கிறார் உள்ளூர்வாசியான குழந்தைவேல்.

தமிழ்நாட்டில் நடந்த பல தேர் திருவிழாக்கள் நடக்காமல் போனதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உண்டு. கோயில்கள் மக்கள் புழக்கத்திலிருந்து தூரமாய் போனதும் அதிலொரு காரணம். அதனால், கோயில் உடைமைகளும் பராமரிப்பின்றிப் போனது. பண்பாட்டு ரீதியில் இளைய தலைமுறை மறந்து போன தேர்த் திருவிழாவை மீண்டும் நடத்த முயற்சிக்கும் கீரனூர் மக்கள், அதற்காக அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இதையும் படிங்க :கட்டிங் ரூ.60, ஷேவிங் ரூ.30... கரோனா காலத்தில் மக்களின் துயர்துடைக்கும் சலூன் கடைக்காரர்!

Last Updated : Nov 19, 2020, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details