புதுக்கோட்டைமாவட்டத்திற்கு தனியாக 2 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என குடிநீர் அபிவிருத்தி திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
புதுக்கோட்டை நகராட்சியில் 29 ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு 10 எம்.எல்.டி நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 56 பேர் பயன்பெறும் வகையில், 16 எம்.எல்.டி குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவிரி ஆற்றில் இரண்டு கூடுதல் நீர் உறிஞ்சி கிணறு ஏற்படுத்தவும், அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகளில் சிமெண்ட் காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக டி.ஐ.எம்.எஸ் குழாய்களாக மாற்றவும், புதுக்கோட்டை நகராட்சி, ஆரம்பப் பகுதியில் தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவும், 75.06 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு, திருவப்பூரில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசியதாவது, "காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகி குடிநீர் குழாய்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், குழாய்களை புதிதாக அமைக்க 75 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தற்போது 10 எம்.எல்.டி தண்ணீர் புதுக்கோட்டை நகராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமை அடையும் போது 16 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப்படும். மேலும், 48 எம்.எல்.டி தண்ணீர் மாவட்ட முழுவதும் வழங்குவதற்கு ஆயிரத்து 480 கோடி ரூபாய் திட்டம் ஆய்வில் உள்ளது.