புதுக்கோட்டை:திருச்சி மாவட்டம், திருவரம்பூருக்கு உட்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50), கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இரவு ரோந்துப் பணியில் பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று பேர் ஆடுகளை வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அவர்களை நிறுத்த முயன்றுள்ளார்.
ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால், ஆய்வாளர் பூமிநாதன், அவரது இரு சக்கர வாகனத்தில் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த பள்ளத்துப்பட்டி மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகே மூவரும் சென்ற வாகனத்தை இடைமறித்து விசாரித்துள்ளார்.
அதில் தஞ்சாவூர் மாவட்டம் தோகூரைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறார்களுடன் சேர்ந்து, அவர்கள் வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை வெட்டிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் அளித்த புகாரின் பேரில், கீரனூர் காவல் நிலையத்தில் பூமிநாதன் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையில், மணிகண்டன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறார்கள் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.