புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது தேவர்மலை. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள தேவர் மலை பாண்டியர் கால கல்வெட்டு, குடைவரைக்கோயில்கள் என தொன்மைகள் நிறைந்தது. நிழல் தரும் நாவல் மரம், சுவை தரும் தண்ணீர் சுனை மட்டுமல்லாது வணங்கவும் வழிபாடு செய்யவும் ஜீவ சமாதி சன்னதியும் இங்கு அமைந்துள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலைக் குறும்ப நாயனார்தான் இங்கு ஜூவ சமாதி அடைந்துள்ளார்.
இவர் யோக கலை, அட்டமா சித்தியில் வல்லவர். நாயன்மார்கள் இரு வகையில் இறைவனை அடைந்தனர். ஒரு சார்பின்ர் சிவனையே கடவுளாக கொண்டும் அவருக்கு திருத்தொண்டு செய்வதில் தன்னை அர்பணிந்தும் வாழந்தவர்கள். மற்றொரு சார்பினர் சிவனடியார்களை குருவாகவும் கடவுளாகவும் கொண்டு அவர்களுக்கு திருத்தொண்டு செய்வதில் வேட்கை உடையவர்கள்.
பெருமிழலைக் குறும்ப நாயனாரோ, சுந்தர மூர்த்தி நாயனாரை குருவாக கொண்டு "பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்" என்று அவராலே திருத்தொண்டத்தொகையில் பாடப்பட்டவர். சுந்தரர் நாளை கயிலை செல்ல இருக்கிறார் என்பதைத் தன் உள்ளக்குறிப்பால் உணர்ந்து அவருக்கு முன்பாக ஜீவ சமாதி மேற்கொண்டு அங்கு சென்றவர். இவரின் குருபக்தியை "மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்' என பெரியபுராணத்தில் சேக்கிழாரும் குறிப்பிடுகிறார்.
இவ்வளவு சிறப்பு மிக்க பெருமிழலைக் குறும்ப நாயனாரின் ஜீவ சமாதி திருக்கோயில் முறையாக பாதுக்காப்படுகிறதா என்றால் அதுதான் இல்லை. இந்த கோயிலின் சிறப்பும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கே சரிவர தெரியவில்லை. எந்நேரமும் பூட்டியே இருக்கும் கருவறை எப்போதுதான் திறக்கப்படும் என்று அவ்வூர் மக்களிடம் விசாரித்தோம்.