புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலி பட்டியை சேர்ந்தவர் அனுராதா, காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அனுராதா, சகோதரர் மாரிமுத்துவுடன் இணைந்து ராவணன் என்ற ஜல்லிக்கட்டு காளையை கடந்த மூன்று வருடங்களாக வளர்த்து வந்தார்.
கடந்த ஆண்டு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்ட ராவணன், ஜல்லிக்கட்டு களத்தில் காளையர்களை திணறடித்து முதல் பரிசு பெற்றது. பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்று, காளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் புதுக்கோட்டை சொலகன் பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வீரர்களை திணறடித்து களத்தை விட்டு ஓடிய ராவணனை அன்று முதல் காணவில்லை. பல்வேறு தரப்பினரும் ராவணனை தேடி வந்த நிலையில், தச்சன்குறிச்சி அருகே ஜல்லிக்கட்டு காளை இறந்து கிடப்பதாக தகவலறிந்து உரிமையாளர் மாரிமுத்து உட்பட பலரும் அங்கு சென்றனர்.